நெல்லை, தூத்துக்குடியில் அதிகாலை பனிப்பொழிவு அதிகரிப்பு-சாலைகளில் வாகனங்களில் செல்வோர் சிரமம்

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்காலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கி, பெய்து வருகிறது. வடமாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் நல்ல மழை தென்படும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று வரை உருப்படியாக ஒருநாள் கூட மழை பெய்யவில்லை.

இந்நிலையில் ஐப்பசி மாதத்திலே மார்கழி மாத பனிப்பொழிவு காணப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில், மழை, பனி, காற்று ஆகிய நான்கையுமே ஒரே நாளில் காண முடிகிறது.அதிலும் கடந்த இரு தினங்களில் அதிகாலை நேரத்தில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. நெல்லை சுற்றுவட்டாரங்களில் வெம்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக அறிய முடிவதில்லை.

அந்தளவுக்கு பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுகிறது. வயல்களில் நிறைந்திருக்கும் நெல்மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன. அதிக பனி பெய்தால் மழை வருமா என்கிற அச்சமும் விவசாயிகள் மத்தியில் காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பூ மார்க்கெட்டுகளுக்கு மல்லி உள்ளிட்ட பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.

Related Stories: