‘வீடுகளுக்கோ ஏசி வசதி; பராமரிப்பு கட்டணம் ரூ. 750-க்கு நோ’அரசு திட்டங்களை முறையாக பயன்படுத்தாத குடியிருப்புவாசிகள்; ‘தினமும் பஞ்சாயத்து’ என அதிகாரிகள் வேதனை

பெரம்பூர்: அரசு மக்களின் நலம் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. அந்த திட்டங்களுக்கு முழுமையாக அரசு பணம் செலவிடப்பட்டாலும் பராமரிப்புக்கு ஒரு சிறு தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். அப்போதுதான் அரசால் கொண்டு வரப்படும் திட்டங்கள் முழுமையடையும். மேலும் சிறு சிறு பிரச்னைகளுக்குகூட அரசாங்கத்தை நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக எந்த ஒரு திட்டத்திற்கும் பராமரிப்பு செலவு உள்ளிட்ட சில செலவுகளை பயனாளிகள் ஏற்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இதனை பெரும்பாலானோர் விரும்புவது கிடையாது. அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு எந்த ஒரு செலவும் செய்யாமல் அரசை குறை சொல்வது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், குடிசை மாற்று வாரியத்தில் வசதிப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழகத்தில் குடிசை பகுதிகள் இருக்கக் கூடாது என்ற ஒரு உயரிய நோக்கோடு 1970ம் ஆண்டு கலைஞரால் குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டு 1971ம் ஆண்டு முதல் சட்டம் இயற்றப்பட்டு சென்னையில் குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு எந்தெந்த பகுதியில் அடித்தட்டு மக்கள் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக கான்கிரீட்  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் 40 வருடம் கழித்து மிகவும் பழுதடைந்து விட்டால் அந்த வீட்டில் உள்ள பயனாளிகள் வெளியிடங்களுக்கு சென்று தங்கும் செலவையும், மீண்டும் அதே இடத்தில் அரசு சார்பில் கட்டிடம் கட்டிக் கொடுத்து அதே இடத்தில் குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்த அளவிற்கு பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் நன்மைகள் கிடைக்கிறது.

சமீபத்தில், குடிசை மாற்று வாரியத்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிசை பகுதியில் வாழ்ந்த பொதுமக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டு சென்னையில் குடிசைப் பகுதி இல்லாத ஒரு சூழ்நிலையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் பயனாளிகளாக பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இப்படி, சென்னையில் புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 864 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அது அதே பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் மற்றும் சென்னையில் பாழடைந்த கட்டிடங்களில் வாழ்ந்தவர்கள் மற்றும் குடிசை பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. இவ்வாறு தமிழக அரசின் பயனை பெற்ற பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். வீடுகளை கட்டித் தருவது, அவர்களை அங்கு குடியமர்த்துவது, அரசின் வேலை. அதன்பின்பு அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரித்துக் கொள்வது குடியேறியவர்களின் வேலை.

ஆனால், குடியேறியவர்கள் அதனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் அந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய இன்ஜினியர்கள் நேரில் சென்று கண்காணித்தால் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். அந்த அளவிற்கு மிகவும் மோசமாக அதை பயன்படுத்துகிறார்கள். பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனங்களை மட்டும் நிறுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மாடுகள் என அனைத்தையும் நிறுத்தி வைத்து விடுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நாற்காலிகள், கட்டில் உள்ளிட்டவற்றை குடிசை மாற்று வாரியத்தின் கீழ் பகுதியில் போட்டு வயதானவர்களை அங்கே படுக்க வைக்கின்றனர். ஒவ்வொரு தளத்திலிருந்தும் குப்பை கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் இடைப்பட்ட இடத்தில் கொட்டி அந்த இடத்தை குப்பை மேடாக மாற்றுகின்றனர். தினமும் காலை குப்பை வண்டி வரும்போது கீழே இறங்கி வந்து குப்பை கொட்டுவதற்கு சிரமமாக உள்ளதால் வீட்டில் மாடியில் இருந்து குப்பையை தூக்கி வீசுகின்றனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கட்டிடத்திற்கும் மற்றொரு கட்டிடத்திற்கும்  இடைப்பட்ட பகுதிகள் குப்பைமேடு போல காட்சி அளிக்கிறது.

ஏழை மக்கள் எந்த கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக குடிசையில் வாழ்ந்தவர்களை பலகோடி ரூபாய் செலவு செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதில் குடியமர்த்தினால் அவர்கள் அதை முறையாக பயன்படுத்துவதில்லை என அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத குடிசை மாற்று வாரிய பகுதி பொறியாளர் ஒருவர் கூறியதாவது: அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து குடிசைகள் இல்லாத ஒரு மாநிலத்தை உருவாக்க கஷ்டப்பட்டு வருகிறது. இதற்காக, அவர்களுக்கு என்று தனியாக வீடு கட்டி கொடுத்தால் அதனை அவர்கள் முறையாக பயன்படுத்த மறுக்கின்றனர். குறிப்பாக ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஒரு அசோசியேஷன் உருவாக்கி அதன் மூலம் அந்த இடத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அந்த அசோசியேஷன் மூலம் பணம் வசூல் செய்து அதனை வைத்து மற்ற செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினோம்.

ஆனால், இதுவரை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் எந்த ஒரு அசோசியேஷனும் தொடங்கப்படவில்லை. மாறாக, மெயின்டனன்ஸ் எனப்படும் பராமரிப்பு செலவுக்கு மாதந்தோறும் 750 ரூபாய் ஒவ்வொரு பயனாளியும் செலுத்த வேண்டும். தற்போது அந்த குடியிருப்பில் 864 பேர் குடியிருந்து வருகின்றனர். இதில் பாதிக்கு மேல் பராமரிப்புத் தொகை செலுத்தவில்லை என்பது வேதனையான ஒரு விஷயம். இதுகுறித்து பலமுறை அவர்களிடத்தில் தெரிவித்தாலும் அதற்கு உரிய பதில் சொல்வது கிடையாது. குடியிருப்பு இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாகனம் நிறுத்தும் இடத்தில் மற்ற பொருட்களை வைக்காதீர்கள் என்று கூறினால்  எங்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். தினம்தோறும் நாங்கள் சென்று எவ்வாறு பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பது? சில வீடுகளில் குறிப்பாக பராமரிப்பு செலவுக்கு பணம் இல்லை என்று கூறும் வீடுகளில் ஏசி அமைத்து உள்ளனர். அரசாங்கத்தால் வசூல் செய்யப்படும் 750 ரூபாய் பணத்தை கூட தர மறுப்பவர்கள் ஏசி போட்டுக்கொண்டு பணம் இல்லை என கூறுகின்றபோது மிகவும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: