அரசின் தடை உத்தரவை மீறி கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை: அங்காடி அதிகாரி ஆய்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்வதுடன் அந்த கடைகளுக்கு சீல் வைத்து 3 மாதம் கடையின் உரிமம்  ரத்து செய்யப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்காக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மஞ்ச பை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் 5 ரூபாய் செலுத்தினால் மஞ்ச பை வந்துவிடும். இருப்பினும் பிளாஸ்டிக் கவர் விற்பனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சீல் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதாக அங்காடி நிர்வாக அலுவலருக்கு கிடைத்த தகவல்படி, இன்று காலை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த  கடைகளை கண்டறிந்து அங்கிருந்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரி சாந்தி கூறும்போது, ‘’கோயம்பேடு பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியம் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள்  விற்பனை செய்யக்கூடாது என பலமுறை விழிப்புணர்வு செய்தும் எச்சரித்தும் சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலையடுத்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்தோம்.

அந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து வருகிறோம். பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும். கடையின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும்’ என்றார்.

Related Stories: