புதுச்சேரியில் அரசு ஆம்புலன்சில் உடைந்து போன ஸ்டிரெச்சர் தள்ளுவண்டியில் சிறுவனை ஏற்றி சென்ற வீடியோ காட்சிகள் வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் ஸ்டிரெச்சர் சேதமானதால், பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் பழுது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம்புலன்சில் ஸ்டிரெச்சர் சேதமானதால். ரயில் நிலையத்தின் பார்சல் தள்ளுவண்டியில் சிறுவனை அழைத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமைதோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று அந்த ரயில் ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது. அதில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். புதுவை அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புதுச்சேரி ரயில்நிலையத்தை அடைந்ததும், ரயிலில் இருந்து இறங்கிய குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புதுவை சுகாதாரத்துறையின் ஆம்புலன்ஸ் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதில் உள்ள ஸ்டிரெச்சர் உடைந்து சேதமடைந்திருந்ததால், நடைமேடைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனை பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில்  படுக்க வைத்து தள்ளிக் கொண்டு வெளியே நின்ற ஆம்புலன்சுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: