மற்ற கட்சிகளுக்கு கொடுக்க பயம்; பாஜ.வுக்கு மட்டுமே 95 சதவீத நன்கொடை: கெலாட் குற்றச்சாட்டு

சூரத்:  ‘தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 95 சதவீத தேர்தல் நன்கொடை, பாஜவிற்கு மட்டுமே செல்கிறது,’ என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள குஜராத்தில், காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் இதில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சூரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்கு விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாஜ அச்சுறுத்துகிறது. மற்ற கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினால் நன்கொடையாளர்களின் வீட்டிற்கு அமலாக்கத் துறையினர் சோதனைக்கு செல்கின்றனர்.

நமது ஜனநாயகத்தில் நன்கொடை கூட ஒரே கட்சிக்குதான் செல்கிறது. அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை குவித்து நாடு முழுவதும் 5 நட்சத்திர அலுவலகங்களை கட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மொத்த நன்கொடையில் 95 சதவீதம் பாஜ.வுக்கு தான் செல்கிறது.  இந்த நன்கொடை மூலம் கிடைக்கும் பணத்தை, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் செய்ததை போல் மற்ற மாநில அரசுகளை கவிழ்க்க பாஜ பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: