கந்தசஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நாகை: நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. முருகன், வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவார்கள். சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் மாலை சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(29ம் தேதி) கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவர் தேரில் எழுந்தருள தேரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து மாலை நிலையை அடையும். தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றிரவு நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி நிகழ்வும் நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும், 31ம் தேதி தெய்வ சேனை திருக்கல்யாணமும், நவம்பர் 1ம் தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நவம்பர் 2ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories: