ரூ.400 கோடி பேரத்திற்கும் பாஜவுக்கும் தொடர்பில்லை: தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு கோயிலில் சத்தியம் செய்த பாஜ தலைவர்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் சந்தித்தனர். இந்த பண்ணை வீட்டில் ஆளும் கட்சியின் 4 எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி வழங்குவதற்காக டெல்லியை சேர்ந்த ராமச்சந்திரபாரதி, ஐதராபாத்தை சேர்ந்த நந்தகிஷோர், திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் பாஜ சார்பில் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ராமச்சந்திரபாரதி, சிம்மயாஜிலு ஆகியோர் சாமியார்கள். நந்தகிஷோர் இடைத்தரகர். இதில் பேரம் பேச வந்தவர்களிடம் இருந்து ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்களுடன் சந்திப்புக்கு ஒரு வாரம் முன்பு பண்ணை வீட்டின் உரிமையாளரான எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி, சுவாமி ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகிஷோர் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் முக்கிய பங்கு வகித்ததாக டி.ஆர்.எஸ். கட்சி குற்றம் சாட்டி உள்ளது.இந்நிலையில், எம்எல்ஏக்களை பேரம் பேசியதற்கும் பாஜவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜ மாநில தலைவர் பண்டி சஞ்சய் கோயிலில் சத்தியம் செய்துள்ளார்.

பண்டி சஞ்சய் நேற்று, யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்றார். அங்கு தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, ‘பேரம் பேசியதற்கும், பாஜகவும் எந்த தொடர்பும் இல்லை’ எனக்கூறி சத்தியம் செய்தார். அதேபோல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், கோயிலுக்கு வந்து பேரம் பேசியது குறித்து சத்தியம் செய்ய வேண்டும் என்றார். இதற்கு டிஆர்எஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ‘எம்எல்ஏக்களை இழுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே பிரதமர் மோடியும், அமித்ஷாவும்தான். எனவே பண்டிசஞ்சய்க்கு பதிலாக மோடியும், அமித்ஷாவும் கோயிலில் வந்து சத்தியம் செய்யட்டும்’ என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பேரம் பேசும் ஆடியோ வெளியான விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ  ரகுநந்தன்ராவ் அமலாக்கத்துறையிடம் புகார் செய்துள்ளார்.

Related Stories: