50 வயதை தாண்டிய நிர்வாகிகளால் தலைவலி; காங்கிரசின் 50:50 பார்முலா சாத்தியமா?.. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் கார்கேவுக்கு சவால்

புதுடெல்லி: 50 வயதை தாண்டியவர்கள் அதிகம் இருப்பதால், காங்கிரசில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நிறைய சவால்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமாக்கள் இன்னும் ஏற்கப்படவில்லை.

அத்தகைய சூழ்நிலையில், புதிய நிர்வாகிகள் நியமிக்கும் வரை ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் 10 பொதுச் செயலாளர்கள், 12 மாநில பொறுப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதனுடன் சுமார் ஆறு டஜன் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஏற்பட்டுள்ளது.

50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், இதன் அடிப்படையில் தற்போதுள்ள பொதுச் செயலாளர்களில் பாதி பேருக்கு மீண்டும் பதவி கிடைக்குமா? என்பது சந்தேகமே. ஏனெனில், அனைத்து பொதுச் செயலாளர்களும் 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மாநில பொறுப்பாளர்களை எடுத்துக் கொண்டால் தெலங்கானா மாநில பொறுப்பாளரான மாணிக் தாகூர் தவிர மற்ற அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதேபோல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், புதியவர்களிடம் எப்படி மாநிலப் பொறுப்பாளர் பொறுப்பை ஒப்படைக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.  பெரும்பாலான பதவியில் இருந்தவர்கள், அதே பதவியில் நீண்ட காலமாக இருந்து வருகின்றனர். உதய்பூரில் நடந்த ‘நவ்சங்கல்ப்’ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்சிப் பதவிகளில் 50 சதவீதம் ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதே பார்முலாவை தற்போது கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள கார்கேவும் தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க இருப்பதால், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது கார்கேவுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது’ என்றனர்.

கார்கே 80 வயது இளைஞர்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், ‘புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 80 வயதாகி விட்டது என்று கூறுகின்றனர். இவ்வாறான கேள்வியே தவறானது. அவர் தனது 80வது வயதிலும் இளைஞரை போன்று பணியாற்றி வருகிறார். முன்பு வாரிசு அரசியல் என்று பேசினீர்கள்; இப்போது தலைவருக்கு 80 வயதாகிறது என்று கூறுகிறீர்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பரப்புவதை தவிர பாஜகவிடம் வேறு என்ன இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: