பாரிமுனையில் திமுக இளைஞரணி சார்பில் ‘திராவிட தொடரின் புதிய பதிப்பே’ பொதுக்கூட்டம்: உதயநிதி ஸ்டாலின், ப.சிதம்பரம் பங்கேற்பு

சென்னை: பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பின்னி மில் மைதானத்தில் நேற்று மாலை திமுக இளைஞரணி சார்பில், திராவிட தொடரின் புதிய பதிப்பே எனும் தலைப்பில் திமுக தலைவராக 2வது முறை பொறுப்பேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தயாநிதி மாறன் எம்பி, ப.சிதம்பரம் எம்பி உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். திமுக தலைவராக 2வது முறை பொறுப்பேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்.

திராவிடத் தொடரின் புதிய பதிப்பே’ என்ற தலைப்பில், திமுக இளைஞரணி சார்பில் நேற்றிரவு பாரிமுனை, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பின்னி மில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். இதில் திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் தயாநிதி மாறன், ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மோடி எப்படி வாயால் வடை சுடுவாரோ, அதேபோல் பாஜவை சேர்ந்த அனைவரும் வாயால் வடை சுடுகின்றனர் என தெரிவித்தார். முன்னதாக தயாநிதி மாறன் எம்பி பேசுகையில், ‘இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் உதயநிதி. ஒரு செங்கலை வைத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறும் ஒன்றிய அரசின் கேவலமான நிலையை வெளிப்படுத்தியவர். ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர்கள் இல்லை. ஆனால், மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது.

ஒரு அரசு என்பது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் அனைத்து அணுகுமுறையும் தவறானது. தேவையின்றி இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. அதற்கு முதல் எதிர்ப்பு குரலை வலுவாக கொடுத்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் எம்பி பேசுகையில், ஒரு பெரிய தலைவரின் தலைமையில் இயங்கி வரும் அரசியல் கட்சி, அவரது மறைவுக்கு பிறகு எப்படி நிற்கும், எவ்விதம் போராடும், எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுவது இயல்புதான். காங்கிரஸ் கட்சியிலும் இதே கேள்வி எழுந்திருந்தது.

இக்கேள்விகளுக்கு விடை காண்பது எளிதல்ல. தேர்தலுக்கு முன்னும், தேர்தலின்போதும், தேர்தலுக்கு பின்னும் எந்த கூட்டணி கட்சியையும் பிரியவிடாமல், ஒரு தலைவனுக்கு இலக்கணமாக இருக்கும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழ் மொழியும் இனமும் இன்று மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. பிரதமர், முதல்வர் மற்றும் அரசு பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் ஒரு மதத்தோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்ளக்கூடாது. என்னை பொறுத்தவரை, நான் நடுநிலையாக இருப்பேன். ஆனால், இந்திய பிரதமர் எங்கு சென்றாலும் ‘நான் இந்து, இந்து.

இந்துவை பத்திதான் பேசுவேன்’ என அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்தியாவை மத அடிப்படையில் பிளக்க நினைக்கும் ஒரு கூட்டத்தை நம்மால் பார்க்க முடிகிறது. திராவிட மாடல் என்பதே நமது இனத்தை, மொழியை காப்பாற்ற வேண்டும் என்பதே. அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் உள்பட பலர் பேசினர். இக்கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மண்டல குழு தலைவர் ராமுலு உள்பட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: