பரம்பிக்குளம் அணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணி துவக்கம்-விரைந்து முடிக்க நடவடிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த  பாரம்பிக்குளம் ஆழியார் பாசன  திட்டம்(பிஏபி) மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 4லட்சத்து 15ஆயிரம் விவசாய நிலம் பாசனம் பெருவதுடன், பொதுமக்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. இதில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள பரம்பிக்குளம் அணை, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

 மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில், சுமார் 17.25 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.  கடந்த ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவ மழையால், நீர்மட்டம் முழு அடியையும் எட்டியதுடன், அணையில் உள்ள  மூன்று மெயின் ஷட்டர் வழியாக, அடிக்கடி உபரியாக தண்ணீர் திறப்பு  இருந்தது.

 இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிகாலையில், பரம்பிக்குளம் அணையில் உள்ள இரண்டாவது மெயின் ஷட்டர் திடீரென உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் உபரிநீர் தொடர்ந்து திறக்கப்பட்டது.  பரம்பிக்குளம் மதகு உடைந்து சம்பவம் குறித்து, அமைச்சர் துரை முருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது, போர்க்கால அடிப்படையில் புதிய மதகு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் போர்கால அடிப்படையில்  புதிய மதகு அமைப்பதற்கு,  பொதுப்பணித்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். மேலும், அணையில் மதகு சீரமைப்பு குறித்து, சென்னையிலிருந்து நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 பரம்பிக்குளம் அணையிலிருந்து, இரண்டு வாரத்துக்கு மேலாக வினாடிக்கு 3ஆயிரம் முதல் 5ஆயிரம் கன அடி வரையிலும், தண்ணீர் திறக்கப்பட்டது. 50 அடியை எட்டியதும், தூணக்கடவு அணைக்கு வினாடிக்கு 1000கன அடி தண்ணீர் திறப்பு இருந்தது. இருப்பினும், 40 முதல் 42அடியாக நீர்மட்டம் குறைந்தால் மட்டுமே புதிய ஷட்டர் பணி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

  இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் பரம்பிக்குளம் அணையில் ரூ.7 கோடியில் புதிய இரும்பாலான ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 42 அடியானது. இதையடுத்து, பரம்பிக்குளத்தில் இரண்டாவது மதகு ஷட்டருக்கு அளவீடு செய்யப்பட்டு, திருச்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட இரும்பு மூலம் 27அடி உயரம் 45அடி அகலத்தில் ஷட்டர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஷட்டர் அமைக்கும் பணியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ஷட்டர் அமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

 பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பரம்பிக்குளம் அணையின் மூன்று மெயின் மதகுகளில், கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிகாலையில், கன மழை காரணமாக தண்ணீர் வரத்தால், அழுத்தம் தாங்காமல் எதிர்பாராத விதமாக, இரண்டாவது ஷட்டர்  உடைந்தது. இதனால், மீதமுள்ள இரண்டு ஷட்டர்களையும் மூன்று ஷட்டர் வழியாகவும் அதிகளவு தண்ணீர் உபரியாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 தற்போது, 5.25 டிஎம்சி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு, நீர்மட்டம் 42அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புதிய -ஷட்டர் அமைக்க நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதன்படி, போர்க்கால அடிப்படையில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அந்த பணி துவங்கி நடைபெற்றுகொண்டிருக்கிறது.

 இதற்கான இரும்பு  தளவாட பொருட்கள் திருச்சி பணிமனையிலிருந்து  கொண்டுவரப்பட்டு தயார்படுதப்படுகிறது.  புதிய மதகுகள் அமைப்பதற்கான பணியை துரிதப்படுத்தி, விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எ டுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: