பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் 3 மாதத்தில் 50 பைக்குகள் திருட்டு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பூர்: பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் தொடர்ந்து பைக்குகள் திருடுபோவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பூர் சுற்று வட்டார பகுதி மக்கள், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, தினசரி மின்சார ரயில்கள் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தினசரி காலை தங்களது வீட்டில் இருந்து இருசக்கர வாகனங்களில் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, ரயில் மூலம் பயணிக்கின்றனர். மாலையில், திரும்பி வந்து, தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கின்றனர். அனைத்து ரயில் நிலையத்திலும் பார்க்கிங் வசதி உள்ளது. ஒப்பந்த அடிப்டையில் அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

அந்த கட்டணத்தை செலுத்தாமல் மிச்சப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களில் வெளிப்புறங்களில் இருசக்கர வாகனங்களை பலர் வரிசையாக நிறுத்தி வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் தினம்தோறும் சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் இல்லாத இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ரயில்வே நிர்வாகத்தினால் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு பார்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 12 மணி நேரத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு 15 ரூபாய் விதம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. மாதம் சந்தாவாக கட்ட வேண்டும் என்றால் 450 ரூபாய் செலுத்தலாம். ஆனால், பலர் ரயில் நிலையம் வெளிப்புறம் உள்ள பகுதிகளில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இங்கு, வாகனங்கள் திருட்டுப்போனால் எந்த வகையிலும் ரயில்வே நிர்வாகம் பொறுப்பாகாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். அந்த பலகையின் பக்கத்திலேயே இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் மூலம் கடந்த 3 மாதத்தில் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடுபோய் உள்ளது. இதுதொடர்பான புகார்கள் பெறபட்டு பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வண்டிகள் திருடும்போது புதிய வண்டிகள் திருடுபோவது தான் வழக்கம். ஆனால் குறிப்பிட்ட ரயில் நிலையம் உள்ள பகுதியில் திருடும்போது பழைய வண்டிகளாக பார்த்து திருடர்கள் திருடுவதாகவும், அப்படி திருடும்போது பெரும்பாலான வண்டிகளுக்கு இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் புகார் தர செல்ல மாட்டார்கள், என்ற நோக்கில் இந்த நூதன திருட்டு பார்முலாவை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

15 ரூபாய் ஒரு நாளைக்கு செலவு செய்ய தயங்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது இரு சக்கர வாகனங்களை மொத்தமாக இதன்மூலம் இழந்து வருகின்றனர். ரயில் நிலையங்களின் வெளிப்புறத்தில் உள்ள இருசக்கர வாகன பார்கிங்கை  முறைப்படுத்தி வாகன ஓட்டிகள் முறையாக பார்க்கிங் செய்தால் ரயில்வே நிர்வாகத்திற்கு உரிய வருமானம் வரும். அவ்வாறு இல்லை என்றால் அரசுக்கு சொந்தமான இடங்களை பிரைவேட் பார்க்கிங் ஆக மாற்றி அதனை தனியாருக்கு டெண்டர் விடுவதன் மூலம் அரசுக்கும் வருமானம் வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு இடங்களிலும் ரயில்வே துறைக்கு வெளிப்புறமாகவும், முறையில்லாமலும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: