குண்டும், குழியுமாக கழிவுநீர் தேங்கியுள்ள தேசிய நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ராஜபாளையம்,: ராஜபாளையம் நகர் பகுதியில் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாய் இருப்பதுடன், கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்கி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கி மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லக்கூடிய பிரதான தேசிய நெடுஞ்சாலை ராஜபாளையம் நகர் வழியாக செல்கிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டதிற்காக சாலைகள் தோண்டப்பட்டது. இதன்படி பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் மீண்டும் சாலைகளை அமைக்கப்படவில்லை. அத்துடன் சாலையின் இரு புறம் கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாமல் இருக்கிறது.

இதன்காரணமாக தற்போது பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய காந்தி சிலை ரவுண்டானா, மதுரை சாலை, தென்காசி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதுடன் அவற்றில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த வழியாக வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் நகரில் முக்கிய சாலையாக உள்ள பகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. முக்கிய வியாபார ஸ்தலங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பலத்த சேதமடைந்து இருப்பது கவலைக்குரியதாக உள்ளது.

இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கும் தண்ணீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. எனவே இப்பிரச்னைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையை சீரமைப்பதுடன் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: