மோடியை உற்சாகப்படுத்திய தமிழக ராணுவ வீரர்கள் சுராங்கனி... வந்தே மாதரம்... பாடலுடன் தீபாவளி: ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடி வீரர்கள் அசத்தல்

லடாக்: எல்லையில் பிரதமர் மோடியை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற பாடலையும், வந்தேமாதரம் என்ற ஏ.ஆர்.ரகுமான் பாடலையும் பாடியது வைரலாகி வருகிறது. தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். அதேபோல் எல்லையிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தார்.

அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும், புல்பாரி எல்லையில் வங்க தேச வீரர்களுக்கும் இனிப்புகளை வழங்கி இந்திய வீரர்கள் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்தாண்டு தீபாவளியைப் பிரதமர் மோடி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது, தமிழக வீரர்கள் தமிழில் பிரபல பாடலான ‘சுராங்கனி... சுராங்கனி’ பாடலை பாடினர். அந்த தருணத்தின் வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘தமிழக வீரர்கள் அவர்களின் நிகழ்ச்சியின் மூலம் எங்களைப் பரவசம் படுத்தியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதேபோல், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வந்தேமாதரம் பாடலை (இந்தியில் பாடியது) வீரர்கள் உற்சாகத்துடன் பாடிய போது, அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் வந்தேமாதரம் பாடலை கைதட்டி ஆர்வத்துடன் பாடினார். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்பாடலை உருவாக்கிய ஏஆர்.ரகுமான், பிரதமர் மோடியின் டுவிட்டை ரீடுவிட் செய்து, ‘இதயம் இதயம் துடிக்கின்றதே.. எங்கும் உன்போல் பாசம் இல்லை; ஆதலால் உன் மடி தேடினேன்.. தாய் மண்ணே வணக்கம். ஒவ்வொருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்’ என்று  பதிவிட்டுள்ளார். வந்தே மாதரம் பாடலை இந்தியிலும், தமிழிலும் ரகுமான் உருவாக்கி இருப்பார். வீரர்கள் இந்தியில் பாடிய குறிப்பிட்ட வரிகளுக்கான தமிழ் வரிகளை ரகுமான் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: