பொதுப்பணித்துறை வளாகத்தின் முட்புதரில் வீசப்பட்ட பலாத்காரத்துக்கு ஆளான 10 வயது சிறுமி மீட்பு: ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தூக்கிச் சென்ற எஸ்ஐ

கன்னோஜ்: உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 10 வயது சிறுமி பொதுப்பணித்துறை வளாக முட்புதரில் மீட்கப்பட்ட நிலையில், அவரை போலீஸ் எஸ்ஐ ஒருவர் மருத்துவமனையில் அனுமதித்தார். உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் அடுத்த குர்சஹாய்கஞ்ச் என்ற இடத்தில் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் எல்லைச் சுவரின் புதர்களுக்குள் 10 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீஸ் எஸ்ஐ மனோஜ் பாண்டே, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவரே அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடினார்.

பின்னர் எதிரே வந்த ஆட்டோவை பிடித்து, சிறுமியை அதில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்து குர்சஹாய்கஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் கான்பூர் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் எஸ்பி குன்வார் அனுபம் சிங் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையைப் பார்க்கும்போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிகிறது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கடைக்கு சென்ற சிறுமி, அப்பகுதியை சேர்ந்த ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் சிறுமியை பல இடங்களிலும் காயப்படுத்தி உள்ளார்.

பின்னர் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள முட்புதரில் தூக்கி வீசிவிட்டு தப்பியுள்ளார். சிறுமியை மருத்துவமனையில் சேர்க்க எஸ்ஐ மனோஜ் பாண்டே முயன்றார். ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவரே சிறுமியை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். சிறுமியின் மருத்துவ அறிக்கை வந்த பின்னரே, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். சிறுமியை போலீஸ் எஸ்ஐ தூக்கிச் சென்ற வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: