நேரடி விதைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்தது; 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம்: சீர்காழி விவசாயிகள் கவலை

சீர்காழி: நேரடி நெல் விதைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்ததால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் திருநகரி உப்புனாற்று கரையோர பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்து 25 நாட்களை கடந்துள்ளது.

தற்பொழுது திருநகரி உப்பனாற்றில் ரூ.30 கோடியில் கதவணை கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் ஆற்றின் குறுக்கே அணை போடப்பட்டுள்ளதால் தண்ணீர் சரிவர செல்லாமல் மணல் திட்டு ஏற்பட்டு கடலுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. தேனூர் கதவுணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி தண்ணீர் வடிய வழியின்றி எட மணல் கிராமத்தில் உள்ள காருவேலி என்ற பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் மூலம் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் நீர்சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்காக நெல் விதைத்தும் எந்தவிதமான பயன் இல்லாத நிலை ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்து வருகிறது. விவசாயிகள் நலன் கருதி அதிகாரிகள் ஆய்வு செய்து நேரடி நெல் விதைப்பு செய்த வயல் பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை வடிய வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்று நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் தண்ணீர் அதிகமாக புகுந்தது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் திருநகரியில் கட்டப்பட்டு வரும் அணை பகுதிக்கு சென்று முற்றுகையிட்டு நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் தண்ணீர் புகுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: