கொடுமுடியாறு பகுதியில் 30 மிமீ பதிவு: நெல்லை, தென்காசி தூத்துக்குடியில் பரவலாக மழை

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.   அதிகபட்சமாக கொடுமுடியாறு பகுதியில் 30 மிமீ மழை பதிவானது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலத்தில்தான் நெல்லை மாவட்டத்திற்கு அதிக மழை கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடிகளை மேற்கொள்வர். பாபநாசம் அணைக்குட்பட்ட வடக்கு, தெற்கு கோடை மேலழகியான், கன்னடியன், கோடகன், நதியுண்ணி, நெல்லை, பாளையங்கால்வாய், மருதூர் மேலக்கால், கீழக்கால், வைகுண்டம் வடகால், தென்கால் என 11 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கரிலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும்.

வடகிழக்கு பருவமழை அறிகுறியாக கடந்த ஒரு வாரமாக பரவலாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் தொடங்கி இரவு வரை பல   பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக  கொடுமுடியாறு பகுதியில்  30 மிமீ மழை பதிவானது. களக்காடு பகுதியில் 16 மிமீ  மழை பெய்தது.  சேரன்மகாதேவி 11.6, மூலைக்கரைப்பட்டி 10, நம்பியாறு,  நாங்குநேரி 4.5, பாளை  மற்றும் ராதாபுரம் தலா 3, நெல்லை 2, அம்பை 1,  மணிமுத்தாறு 0.6 மிமீ மழை  பதிவானது.

பாபநாசம் அணையின் நீர் இருப்பு 83.90 அடியாக  உள்ளது. அணைக்கு  விநாடிக்கு 462 கனஅடி நீர்  வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 404 கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு  அணையின் நீர் இருப்பு 96.52 அடியாக உள்ளது.  மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 70.70  அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6 கனஅடி நீர்  வருகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்  இருப்பு 13.25 அடியாக உள்ளது. நீர்  வரத்து இல்லை. கொடுமுடியாறு அணை நீர்  இருப்பு 52.25 அடியாக உள்ளது.  அணைக்கு 21 கனஅடி நீர் வருகிறது. 2 கனஅடி நீர்  வெளியேற்றப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில்  அடவிநயினார் அணை பகுதியில் 12 மிமீ,  ஆய்க்குடியில் 12 மிமீ மழை  பெய்துள்ளது. செங்கோட்டை 8.6, குண்டாறு 3,  தென்காசி, சங்கரன்கோவில்,  கருப்பாநதி தலா 1 மிமீ மழை பெய்துள்ளது.  தென்காசி மாவட்டம் கடனா அணை நீர்  இருப்பு 58 அடியாக உள்ளது. ராமநதி அணை  நீர் இருப்பு 64.25 அடியாகவும்,  கருப்பாநதி அணை நீர் இருப்பு 54  அடியாகவும், குண்டாறு அணைநீர் இருப்பு  33.62 அடியாகவும் உள்ளது. தற்போது பெய்துள்ள மழையால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை துவங்க தயாராகி வருகின்றனர். எனினும் வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கி அணைகள் நிரம்ப வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: