ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது: சிபிசிஐடி டிஜிபி பேட்டி

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்று சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தெரிவித்தார். திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம் தேதி மர்ம  நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் 1400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்துள்ளனர். இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேற்று காலை திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக, முறையாக நடைபெற்று வருகிறது. துப்பு கிடைத்துள்ளது. விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரங்களை தெரிவிக்க முடியும். அதற்கு முன்பாக நான் எதையும் கூற முடியாது. இந்த வழக்கில் கடந்த 6 மாதங்களாக நாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். 20 பேரிடம் உண்மை தன்மை அறியும் சோதனை நடைபெற உள்ளது. விசாரணைக்கு  தேவையான ஒத்துழைப்பு கிடைக்கிறது. விசாரணை தொடர்பான எந்த விபரங்களையும்  தற்போது தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர், சந்தேகத்துக்குரிய நபர்களை அழைத்து  வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் அங்கு சென்று சிறப்பு புலனாய்வு குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். வழக்கின் தற்போதையை நிலை குறித்து, அவர்களிடம் கேட்டறிந்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

Related Stories: