தீபாவளி நேரத்தில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்ந்தது: மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தொட்டது; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தீபாவளி நேரத்தில் தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதனால், மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதே நேரத்தில் அதிரடியாக குறைந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.37,640க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அதாவது, 19ம் தேதி ஒரு சவரன் ரூ.37,600க்கும், 20ம் தேதி ரூ.37,480, 21ம் தேதி (நேற்று முன்தினம்) ஒரு கிராம் ரூ.4,665க்கும், சவரன் ரூ.37,320க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. தீபாவளிக்காக நகை வாங்க நினைத்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மகிழ்ச்சி 3 நாட்கள் கூட நீடிக்கவில்லை. அதாவது, நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,740க்கும், சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது. நாளை தீபாவளி பண்டிகை வருகிறது. நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினத்தை பயன்படுத்தி நிறைய பேர் நகை வாங்கலாம் என்று நினைத்து இருந்தனர். இந்த திடீர் விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தொட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். தங்கம் விலை உயர்ந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து நகை வாங்கியதாக வியாபாரிகள் கூறினர். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் அரசியல் மாற்றம் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை இன்னும் உயரக்கூடும். சூழ்நிலை மாறும் பட்சத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

Related Stories: