தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏடிஜிபி, ஐ.ஜி. உட்பட 12 அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கியது: டிஎஸ்பி திருமலை உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட், தமிழக அரசு உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசாரணை ஆணையர் நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைப்படி கூடுதல் டிஜிபி, ஐஜி உட்பட 12 காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக  பொதுமக்கள் கடந்த 22.5.2018ம் தேதி 100 வது நாள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது.   இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கை, கடந்த 18ம் தேதி நடந்த சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது.

அதில், துப்பாக்கி பிரயோகம் செய்ததில் ஏதேனும் காவல்துறையினர் மீது வரம்பு மீறல் இருந்ததா என்று ஆணையம் விசாரணை நடத்தியது.

அப்போது, தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சி.சராட்கர், தூத்துக்குடி எஸ்பி.மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாறன், இன்ஸ்பெக்டர்  திருமலை, இன்ஸ்பெக்டர் ஹரிகரன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரென்னீஸ், சொர்ணமணி, இரண்டாம் நிலை காவலர் ராஜா, முதல்நிலை காவலர் சங்கர், முதல் நிலை காவலர் சுடலைக்கண்ணு, இரண்டாம் நிலை காவலர் தாண்டவமூர்த்தி, முதல் நிலை காவலர் சதீஷ்குமார், தலைமை காவலர் ராஜா, முதல் நிலை காவலர் கண்ணன், காவலர் மதிவாணன் என 17 பேர் வரம்பு மீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட 17 போலீஸ் அதிகாரிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளான சேகர், சந்திரன், கண்ணன் என மொத்தம் 21 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

நீதிபதியின் பரிந்துரைப்படி கடந்த 19ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உள்துறை மூலமாக அப்போதைய தென்மண்டல ஐஜி, திருநெல்வேலி சரக டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் நேரடியாக ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார். இதற்கிடையே பேரவையில் அறிவித்தப்படி துப்பாக்கி சூட்டின் போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக பணியாற்றி வரும் நிலையிலும், காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ்குமார் என 4 பேர் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி சூட்டில் நேரடி தொடர்பில் இருந்த அப்போது டிஎஸ்பியாக இருந்த லிங்க திருமாறன் கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

மேலும், விசாரணை ஆணையர் நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைப்படி மீதமுள்ள கூடுதல் டிஜிபி, ஐஜி உட்பட 12 காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் விசாரணை அறிக்கையை உள்துறை செயலாளருக்கு அளித்துள்ளார். அதன்படி 12 காவல்துறை அதிகாரிகள் மீதான அறிக்கை டிஜிபிக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து துப்பாக்கி சூட்டின்போது விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 12 அதிகாரிகளின் குற்றங்கள் என்ன என்பது குறித்தும், அதற்கு துறை ரீதியான என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சட்டப்பேரவையில் அறிவித்தப்படி விசாரணை 12 காவல் அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: