தாம்பரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை நடவடிக்கை

தாம்பரம்: தாம்பரத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். தாம்பரம் காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை சந்திப்பு அருகே அரசுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதனை தனியார் ஒருவர் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலத்தின் அருகே உள்ள பள்ளிக்கு இந்த நிலம் சொந்தம் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில், வருவாய்த் துறையினர், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் இந்த நிலத்தில் இருந்தவர்களை வெளியேற்றி, நிலத்தை கைப்பற்றினர். புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு இடம் தேடி வந்த நிலையில், இந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையராக அலுவலகம் அமைக்கப்படும் என வருவாய்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான ஆணை மாவட்ட நிர்வாகத்தில் இருந்து இன்று அளிக்கபட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் அரசு மதிப்பு ரூ.100 கோடி எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: