கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் 99வது பிறந்தநாள்: கவர்னர், முதல்வர் வாழ்த்து

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் வி.எஸ். அச்சுதானந்தன். 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஆலப்புழா மாவட்டம் புன்னப்ரா பரவூரில் பிறந்தார். 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் ஆர்வம் ஏற்பட்டு விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1956ல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலப்புழா மாவட்ட செயலாளர் ஆனார். 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1967ல் முதன் முதலாக அம்பலப்புழா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1970 லிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் 1991ல் மாராரிக்குளம் தொகுதியிலும், 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மலம்புழா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980 முதல் 1991 வரை 3 முறை மாநில செயலாளர் பதவியை வகித்தார். கட்சியின் மத்தியக் கமிட்டி, பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார்.

அச்சுதானந்தன் கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், 2006 முதல் 2011 வரை முதல்வராகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பக்கவாத நோய் ஏற்பட்டதால் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அவரது மகன் அருண்குமார் வீட்டில் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 99வது பிறந்தநாள் கொண்டாடும் அச்சுதானந்தனுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: