உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னை பக்தர்கள் உடலுக்கு பிரேத பரிசோதனை: விமானம் மூலம் அனுப்பிவைப்பு

ருத்ரபிரயாக்: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயிலுக்கு சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாயினர். விபத்தில் உயிரிழந்த பிரேம் குமார், சுஜாதா  மற்றும் கலா ஆகியோர் சென்னை, திருமங்கலம், மயிலாப்பூரை சேர்ந்தவர்கள். கேதார்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு பிரேம் குமார், சுஜாதா மற்றும் அவரது தங்கை கலா என மூவரும் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கலாவின் கணவர் ரமேஷ் மட்டும் குதிரையில் பயணம் மேற்கொள்ள இருந்ததால், அவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யாததால் உயிர் தப்பினார். 7 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் கூறுகையில்,‘‘ உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து 2 பேரின் உடல்கள் மட்டும் ஹெலிகாப்டர் மூலம் ஹரித்துவாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய உடல்கள் ரிஷிகேஷ் ஜாலிகிரான்ட் விமான நிலையத்துக்கு அனுப்பி  உள்ளோம். அங்கிருந்து விமானம் மூலம் உடல்கள், அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும்’’ என்றார்.

Related Stories: