பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் இல்லாததால் பாதியில் பேச்சை முடித்த அதிமுக மாஜி அமைச்சர்: ஆரணியில் அரங்கேறிய பரபரப்பு

ஆரணி: ஆரணியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் தொண்டர்கள் குறைந்தளவே இருந்ததால் விரக்தியடைந்த மாஜி அமைச்சர் பேச்சை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பினார். அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆரணி அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். இதில் பங்கேற்க நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்களது பகுதியில் இருந்து பொதுமக்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக தெரிகிறது.

முன்னதாக கூட்டத்திற்கு கே.பி.முனுசாமி வருவதற்கு காலதாமதமானதால் அங்கு அமர்ந்திருந்த தொண்டர்கள் படிப்படியாக வெளியேறினர். கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் வரும் வரையாவது அமர்ந்திருங்கள் என்று கெஞ்சினர். இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் அங்கிருந்து சென்றபடி இருந்தனர்.

நீண்ட நேரம் கழித்து கூட்டத்திற்கு வந்த கே.பி.முனுசாமி பேச தொடங்கியதும் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலைந்து சென்றுவிட்டதால் சேர்கள் காலியாகி வெறிச்சோடியது. இதைபார்த்து அப்செட் ஆன எம்எல்ஏ ராமச்சந்திரன் கட்சி நிர்வாகிகளிடம் கோபம் அடைந்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரின் பேச்சை கேட்க கட்சி நிர்வாகிகளே குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் கே.பி.முனுசாமி 20 நிமிடத்தில் பேச்ைச முடித்து கொண்டார். இதன்பின்னர், நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், கட்சி நிர்வாகிகளைகூட சந்தித்து பேசாமல் வேக, வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார். இதனால் துணை பொதுச்செயலாளரை சந்தித்து பேச ஆர்வமுடன் காத்திருந்த கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: