விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எக்ஸ்ரே எடுக்கும் பிரிவில் டெக்னீசியன் பற்றாக்குறை-நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில், டெக்னீசியன் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல ஆண்டுகளாகி விட்டது. விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். நோயாளிகள் அதிகரித்து விட்ட நிலையில் நிதி ஒதுக்கீடு அரசு தலைமை மருத்துவமனைக்கான ஒதுக்கீடாக இருப்பதால், மருந்து மாத்திரைகள் துவங்கி பணியாளர் நியமனம் வரை, சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்று வரை முடிவடையாத நிலையில், குறைவான இடவசதியில் மருத்துவமனை செயல்படுத்த வேண்டிய சூழல் தொடர்கிறது.மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் வழங்கி, மதுரை அரசு மருத்துவமனைக்கு இன்று வரை அனுப்பட்டு வருகின்றனர். மேலும், முற்றிய நோய்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில், எக்ஸ்ரே எடுப்பதற்கு உள் மற்றும் வெளிநோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் தொடர்கிறது. எக்ஸ்ரே பிரிவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நியமனம் செய்ய வேண்டிய எக்ஸ்ரே டெக்னீசியன் நியமனம் செய்யப்படாத நிலையில் இரண்டு டெக்னீசியன்களால் நோயாளிகளை சமாளிக்க முடியாத நிலை தொடர்கிறது.

கூடுதல் டெக்னீசியன்கள் நியமனம் செய்து நோயாளிகளுக்கு விரைவான தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவாக நிறைவு செய்து மருத்துவமனை செயல்பாட்டை விரிவு படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: