பொள்ளாச்சி சந்தையில் ஒரு மாதத்திற்கு பிறகு மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தையில் நேற்று ஒரு மாதத்திற்கு பிற மாடு விற்பனை விறுவிறுப்படன் இருந்தது. கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், கூடுதல் விலைக்கு போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை மாடுகள் விற்பனை ஓரளவு இருந்தது. அதன்பின், புரட்டாசி மாதம் துவக்கத்தால், வார சந்தை நாளின்போது மாடுகள் வரத்து குறைவாக இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் மிகவும் குறைவால் அனைத்து ரக மாடுகளின் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால், விற்பனை செய்வதற்காக, பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை கொண்டு வந்தவர்கள் உரிய விலை கிடைக்காமல் தவித்தனர்.

 இந்நிலையில், நேற்று நடந்த சந்தை நாளின்போது, வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு, மாடு வரத்து அதிகமாக இருந்ததுடன், தீபாவளி நெருங்குவதால், கேரள வியாபாரிகள் அதிகம் வந்தனர். இதனால், மாடுகள் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது

 பெரும்பாலான மாடுகள், கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிக விலைக்கு போனது. கடந்த வாரம் ரூ.27 ஆயிரத்துக்கு விலைபோன பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும், ரூ.26 ஆயிரத்துக்கு விலைபோன காளை மாடு ரூ.38 ஆயிரம் வரையிலும், ரூ.24 ஆயிரத்துக்கு விலைபோன எருமை மாடு ரூ.33 ஆயிரத்துக்கும், கன்றுகுட்டி ரூ.15 ஆயிரத்துக்கும் என கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில்,‘புரட்டாசியையொட்டி கடந்த 4 வாரமாக கேரளாவில் மாட்டு இறைச்சி விற்பனை குறைந்திருந்தது. இதனால் பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகளை வாங்க வரும் கேரள வியாபாரிகள் குறைந்ததுடன், அனைத்து ரக மாடுகளின் விற்பனை மந்தமாகி குறைந்த விலைக்கு போனது.இந்நிலையில், நேற்று முன்தினம் 17ம் தேதியுடன் புரட்டாசி மாதம் நிறைவாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதனால், சில வாரத்திற்கு பிறகு தற்போது மீண்டும் மாடு விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததால், மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது’ என்றனர்.

சேற்றில் சிக்கிய வாகனங்கள்

பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று முன்தினம் இரவு முதல் சரக்கு வாகனங்கள் மூலம் மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில், நேற்று அதிகாலையிலிருந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனால், சந்தைக்குள் சரக்கு வாகனங்கள் செல்வது மிகவும் தாமதமானது. இதற்கிடையே இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால், சந்தைக்குள் செல்லும் வழி சேறும் சகதியுமானது. இதனால், அந்த வழியாக சென்ற சரக்கு வாகனங்கள் சிக்கி கொண்டது. இதில் மாடுகளை ஏற்றி வந்த சில சரக்க வாகனம் சேற்றில் ஆழமாக சிக்கிகொண்டதால் அதனை அப்புறப்படுத்த பல மணிநேரம் கடந்தது. இதனால், வியாபாரிகளும் சிரமப்பட்டனர்.

Related Stories: