தர்மபுரி அருகே ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரால் அரசு பள்ளிக்கு செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கு-மேம்பாலம் கட்டித்தர வலியுறுத்தல்

தர்மபுரி : இண்டூர் அருகே அரசுப்பள்ளிக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 170 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் தாழ்வான ஓரிடத்தில், இண்டூர் ஏரியின் உபரிநீர் வெளியேறி செல்வது வழக்கம். இதனை ஆபத்தான முறையில் மாணவர்கள் கடந்து செல்கின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பெய்து வந்த மழையினால் இண்டூர் ஏரி மற்றும் அதற்கு முன்னதாக உள்ள 4 ஏரிகள் சமீபத்தில் நிரம்பின.

தற்போது தொடர் மழை பெய்து வருவதால், இண்டூர் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் நாகாவதி அணையை நோக்கி செல்கிறது. இவ்வாறு செல்லும் தண்ணீர், நத்தஅள்ளி அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்லும் சாலையை ஓரிடத்தில் கடந்து செல்கிறது. நேற்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது சிறிதளவு மட்டுமே சென்ற தண்ணீர், மதியத்துக்கு பின்னர் அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது. இதனால், மாணவர்கள் வெள்ள நீரை மாணவர்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் இணைந்து மாணவ, மாணவிகள் வெள்ளநீரை கடந்து வீடு திரும்ப உதவி செய்தனர். நேற்று மழை பெய்யாததால், தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், மாணவர்கள் பெற்றோர் உதவியுடன் தண்ணீரை கடந்து சென்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நீர்வழிப்பாதையில் அதிக நீர்வரத்து ஏற்பட்டதில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய இடத்தை தேர்வு செய்து நத்தஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியை கட்டினர். ஆனால், நடப்பு ஆண்டில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் வரிசையாக நிரம்பி வருவதால் உபரிநீர் அணையை நோக்கி கால்வாயில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. எனவே, இப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் பாதுகாப்பாக பயணிக்க அரசு மேம்பாலம் அல்லது தரைப்பாலம் அமைத்து தர வேண்டும், என்றனர்.

Related Stories: