83 தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: 83 தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 43வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியார், சிவஸ்ரீ பிச்சை குருக்கள், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் முத்துசாமி, ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வல்லுநர்கள் வசந்தி, ராமமூர்த்தி, தொல்லியல் துறை வடிவமைப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயில்,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்உள்ளிட்ட 83 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

Related Stories: