கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்?: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை ஏன் வெளியேற்றினேன் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது.

அப்போது, அதிமுக எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அதிமுக பேரவை உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர்.

இதையடுத்து, அவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குறித்து அப்பாவு விளக்கமளித்தார். அதில், சட்டமன்றத்துக்கு முன்பாக தன் அறையில் என்னை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர் என்றார். மேலும் தன்னிடம் 4 கடிதங்கள் தரப்பட்டதாகவும், அதுகுறித்து முடிவு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் ஆகியோர் தலைமையில் எதிர்கொண்டு, எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கான கடிதத்தில் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு தந்துள்ளதாக கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு பதவி பிற பதவிகள் கட்சிகளின் விருப்பத்துக்கேற்பவே உள்ளன. அதிமுக ஆட்சியில், கருணாநிதி சட்டப்பேரவைக்கு வந்து செல்ல வசதியாக ஒரு இருக்கையை மாற்றித்தரக் கோரியதை, அப்போது இருந்தவர்கள் நிராகரித்துவிட்டதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். எனவே, சபையில் இருக்கைகள் ஒதுக்குவது என்பது எனது முடிவு, அதில் யாரும் தலையிட முடியாது என்றும்  தெரிவித்தார்.

விதிப்படி துணைத் தலைவர் என்ற பதவி இல்லாததால், அந்த பதவியை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் அலுவல் ஆய்வுக்குழுவில் இவரை சேருங்கள், இவரை நீக்குங்கள் யாரும் சொல்ல முடியாது என்றார். இதை தெரிந்து கொள்ளாமல் அதிமுக எதிர்க்கட்சி தலைவரும், எம்எல்ஏக்களும்  பேரவை மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

Related Stories: