மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்

சென்னை:ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அரசின் எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமை வகித்தார். இதில் தமிழக அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022ஐ திரும்ப பெற வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற  தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தமிழக முதல்வர் இச்சட்டத்தை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினார்.

ஆகவே, மின்சார திருத்த சட்ட மசோதவை திரும்ப பெற வேண்டும் மற்றும் மாநில எரிசக்தி விநியோக நிறுவனங்களே தற்போதுள்ள நடைமுறைளை தொடர்ந்தால் தான் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை குறைவான விலையில் வழங்க முடியும். தமிழகத்தில் சுமார் 3 கோடி அளவிலான ஸ்மார்ட் மீட்டர்களை விவசாய மற்றும் குடிசை மின் இணைப்புகள் தவிர்த்து அனைத்து குறைந்தழுத்த மின் நுகர்வோர்களுக்கும் பொருத்துவதற்கு நடவடிக்கை மின்துறையே எடுக்கும். அதற்கான பணிகள் செயல்படுத்தப்படஉள்ளது. இந்தியாவிலேயே காற்றாலைகளின் நிறுவு திறனை அதிகமாக கொண்ட முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. புதிய மின் திட்டங்களான வடசென்னை அனல் மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், உடன்குடி விரிவாக்க நிலை-1, எண்ணூர் விரிவாக்கம், உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டம் என மொத்தமாக 8,340 மெகா வாட் நிறுவு திறன் கொண்ட நிலக்கரியை எரிபொருளாக கொண்டு இயங்கக்கூடிய மின் திட்டங்களை தமிழக மின்சாரத்துறை நிறுவி வருகிறது.  

தற்போதைய, மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியானது சார் சுரங்கத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிகபட்சமாக 14 ரேக்குகள் மட்டுமே மின்துறைக்கு அனுப்படுகின்றன. எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தேவையான நிலக்கரியை அனுப்புவதற்கு கூடுதல் ரேக்குகளை வழங்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

நுகர்வோர் மீது பெரும் கட்டணச்சுமை சுமத்தப்படுவதைத் தவிர்க்கவும், தென் பிராந்திய மாநிலங்களுக்கு நீதி வழங்கவும், ராய்கர்-புகளூர்,திருச்சூர் உயர் அழுத்த நேர்திசை மின் தொடரமைப்பு சொத்துக்களை, தேசிய சொத்தாக அறிவித்து, அதன் கட்டணத்தை, இந்திய அளவிலான அனைத்து பயனீட்டாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதிய உத்தரவுகளை வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: