அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை: எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சமாதான புறாக்களை பறக்க விட்டார் ஓபிஎஸ்

சென்னை: அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ் சமாதான புறாக்களை பறக்க விட்டார். அதிமுக தொடங்கப்பட்டு 50  ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 51வது ஆண்டு தொடங்கியது. இதையொட்டி தொடக்க  விழா நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடந்தது. கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு  எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார். தொடர்ந்து, கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும்  எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள்  அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன்,  எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் தம்பிதுரை உள்பட அதிமுக  நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா உருவப்படங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி ஏற்றினார்.

சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்பு  வழங்கினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்  பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர்  மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி கட்சி கொடியை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

Related Stories: