அதிமுகவின் பொன் விழா ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, பன்னீர் தனித்தனியே கொண்டாடினர்..!!

சென்னை: அதிமுகவின் பொன் விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழாவை 3 அணிகளாக பிரிந்து கொண்டாடினர். கட்சியின் ஆண்டு மலரும் வெளியிடப்படவில்லை. அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார். தொண்டர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். ஏழை, எளிய மக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜிஆர். நினைவு இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி ஏற்றி எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து சமாதான புறாக்கள் ஓ.பன்னீர்செல்வம் பறக்கவிட்டார். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் ஏற்கனவே சசிகலாவால் வைக்கப்பட்ட கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் உள்ளது. ஆனால் இன்று புதிதாக ஒரு கொடிக்கம்பத்தை வைத்து அதில் கொடியேற்றப்பட்டுள்ளது. கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றவுள்ளார். இதேபோன்று தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா நிறைவை அக்கட்சியினர் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: