தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நாமக்கல்: கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது 30 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பொதுவாக ஸ்வைன் ஃப்ளூ என்று குறிப்பிடப்படும் ஹெச் ஒன் என் ஒன் வைரஸ் காய்ச்சல் அதாவது பன்றி காய்ச்சல் ஒரு தொற்று சுவாச நோய் மற்றும் மக்களுக்குப் பருவகால காய்ச்சல் அறிகுறிகளை உருவாக்குகிறது. முதன் முதலில் 2009ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த காய்ச்சல் ஸ்வைன் இன்ஃப்ளுயன்சா வைரஸ்களால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அல்லது சுற்றுச்சூழலுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளும் போது பரவுகிறது.

தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதுகுறித்து பயப்பட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பல்லாக்கா பாளையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ‘நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்துவதற்கு 46 கோடி ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் ஹெச் ஒன் என் ஒன் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது நாள்தோறும் காட்சி தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 389 நடமாடும் மருத்துவ வாகன மூலம் அனைத்து பள்ளிகளிலும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 30 ஆக குறைந்துள்ளது என்றார். மேலும், தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மயிலாடுதுறை என ஆறு இடங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து தொடங்க வேண்டும் மற்றும் கோவைக்குப் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை பரிசீலிப்பதாகப் பேட்டியில் கூறினார்.

Related Stories: