2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் மற்றும் பூந்தமல்லி பணிமனைகளாக செயல்படும்; நிர்வாக இயக்குனர் சித்திக் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் மற்றும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் பணிமனைகளாக செயல்படும் நிர்வாக இயக்குனர் சித்திக் கூறினார். சென்னையில் 2ம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ.61,841 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 3வது வழித்தடமான மாதவரம் - சோழிங்கநல்லூர்  வரையிலான பாதையில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா நடந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மாதவரம் - சோழிங்நகல்லூர் வரையிலான பாதையில் சுரங்கம் தோண்டும் பணிகளை தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் கூறியதாவது:

மாதவரம் பால் பண்ணையிலிருந்து முதற்கட்டமாக டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கியது. அதன்படி மாதவரம் நெடுஞ்சாலை வரை 1.4 கி.மீ. சுரங்கம் தோண்டும் பணி 5 மாதங்களில் முடிவடையும். மேலும் மாதவரம் முதல் கெல்லீஸ் வரை 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்த 2 மாதத்தில் பணியில் பயன்படுத்தப்படும். 2ம் கட்ட மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2ம் கட்ட மெட்ரோ பணியில் மணல் பரப்புள்ள இடங்களில் நாளொன்றுக்கு 10 மீட்டர் தூரமும், பாறைகள் உள்ள பகுதியில் கடினமாக இருப்பதால் நாளொன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே  தோண்டப்படும். இதையடுத்து இந்த பணிகள் அனைத்தும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பணிகள் நிறைவடையாத நிலையில் 2027ம் ஆண்டு தொடக்கத்திலேயே பணிகள் முடிக்கப்படும். அதை தொடர்ந்து 2ம் கட்ட பணி முடிந்தவுடன் முதற்கட்டமாக பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். அடுத்த 2 மாதங்களில் கிரீன்வேஸ் சாலையிலிருந்து அடையாறு வழித்தடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறும். இந்த 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மாதவரம் மற்றும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் பணிமனைகளாக செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: