உடுமலை அருகே விதை உற்பத்தி பண்ணையில் 8 ஆண்டில் 5.54 லட்சம் தென்னங்கன்று விநியோகம்-தென்னை வளர்ச்சி வாரியம் சாதனை

உடுமலை : உடுமலை அருகே  விதை உற்பத்தி பண்ணையில் கடந்த 8 ஆண்டுகளில் 5 லட்சத்து 54 ஆயிரம் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி அணையை ஒட்டி 102 ஏக்கர் பரப்பில் ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய கட்டுப்பாட்டில் செயல் விளக்கம் மற்றும் விதை உற்பத்தி பண்ணை செயல்பட்டு வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய இப்பண்ணை தரமான தென்னை நாற்றுக்களை உற்பத்தி செய்வது, அவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது, அறிவியல் ரீதியான சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தென்னை சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கும், விவசாய பட்டயம் மற்றும் விவசாய பட்டதாரிகளுக்கும்,வேலையில்லா இளைஞர்களுக்கும்  வழங்குவது மற்றும் தென்னை சார் தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து காட்டுவது மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

பொதுவாக, தமிழகத்தில் மொத்தம் 4.42 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 5432.36 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரி உற்பத்தி திறன் ஓராண்டுக்கு  1 ஹெக்டேருக்கு 12,282 தேங்காய்கள். நாட்டிலேயே அதிக தென்னை பயிரிடப்படும் மாநிலங்களில் தமிழகம் உற்பத்தியில் 2 ம் இடத்திலும், பரப்பளவில் 3வது இடத்திலும், உற்பத்தித்திறனில் முதலிடத்திலும் உள்ளது.தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

நாட்டின் தென்னை உற்பத்தியில் 20 சதவீதமும், உற்பத்தி திறனில் 26 சதவீதமும் தமிழகத்தின் பங்காகும். தேங்காய் பதப்படுத்தும் அலகு நிறுவுவதிலும் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியிலும் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 2,294.81 கோடி ரூபாய். அதில் தமிழகத்தின் பங்களிப்பு (மொத்த தேங்காய் பொருட்கள் ஏற்றுமதியில்)1,441 கோடி ரூபாய். அதாவது இது 63 சதவீதமாகும். தமிழகத்தின் மொத்த ஏற்றுமதி 1,19,538 மெட்ரிக் டன்.தென்னை வளர்ச்சி வாரியத்தின் முயற்சியில் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் டெட்ரா பேக்கில் நீராவை வெளி கொண்டு வந்ததும் தமிழகமே.

 கடந்த 3 ஆண்டுகளில்  இந்தியாவிலிருந்து 16 தேங்காய் உணவு பதனிடும் நிறுவனங்களுக்கு சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க  நிதியுதவி வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் இருந்து 13 நிறுவனங்கள் பங்கேற்றன.கடந்த 3 ஆண்டுகளில் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக ஏற்றுமதிக்காக வழங்கிய மொத்த பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ்களில் 44 சதவீதம் அதாவது 1270 தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னை மையத்தின் பண்ணை மேலாளர் கூறுகையில்,‘‘விதை உற்பத்தி பண்ணையில் குட்டை, நெட்டை மற்றும் வீரிய ஒட்டு ரக (இயற்கை) கன்றுகள் தரமாக உற்பத்தி செய்து தரமான  விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் 5 லட்சத்து 54 ஆயிரம் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-2018ம் நிதியாண்டில் மட்டும் ரூ.94 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான சுமார் 1 லட்சத்து 34 ஆயிரம் தரமான தென்னை நாற்றுக்களை தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக மாதிரி செயல் விளக்க பண்ணை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தற்போது 102 ஏக்கர் பரப்பளவில் 70 ஏக்கரில் மட்டும் சுமார் 4 யிரத்து 50 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் நெட்டை, குட்டை, கலப்பு ஒட்டு வகைகளாகும். சமீபத்தில் ரூ.3 கோடி மதிப்பில் 9 ஆயிரம் சதுர அடியில் உழவர் பயிற்சி மையம் மற்றும் நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மொத்த நிதியில் 31.70 சதவீதம்

தேங்காய் ஓடு அடிப்படையிலான ஆக்டிவேட்டட் கார்பன், தேங்காய் எண்ணெய்  மற்றும் தேங்காய் ஓடு கரி ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.  மற்றும் காய்ந்த தேங்காய் ஏற்றுமதியில் 2வது இடத்தில் உள்ளது. தென்னை  வளர்ச்சி வாரியத்தின் ஆண்டு மொத்த நிதியில் 31.70 சதவீதம் தமிழகத்தில்  பயன்படுத்தப்படுகிறது.

தமிழகம் முதலிடம்

தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு  திட்டங்களை வழங்கியது, தென்னை மரம் ஏறுபவர்களுக்கு பாதுகாப்பு காப்பீட்டு  திட்டம் முழுவீச்சில் பிரசார முறையில் செயல்படுத்தியது, 2021-2022ல்  தென்னை மர காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமின்றி, தென்னை  பதப்படுத்தலுக்கான தொழில்நுட்ப இயக்க திட்டத்தின் கீழ் உதவி வழங்குவது என  அனைத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

Related Stories: