ஜம்முவில் 18 இடங்களில் என்ஐஏ ரெய்டு: தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்த அறக்கட்டளை தலைவர் கைது

ஜம்மு: தீவிரவாத அமைப்புகளுக்கு  நிதி அளித்தது தொடர்பாக ஜம்முவில்  18 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து, அவர்களுக்கு நிதியுதவி அளித்து வருபவர்களை ரகசியமாக கண்காணித்து, பல்வேறு இடங்களில் தேசிய புல னாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஜம்மு காஷ்மீரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அல் ஹுதா கல்வி அறக்கட்டளை மூலம் நன்கொடைகள், ஹவாலா மூலம் நிதி திரட்டி, அதை ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக செயல்பட தூண்டிவிடவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும்  இறையாண்மையை சீர்குலைக்கவும் இந்த அமைப்பு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த 3ம் தேதி என்ஐஏ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச், ஜம்மு, ஸ்ரீநகர், பந்திபோரா, ஷோபியான், புல்வாமா மற்றும் பட்காம் உட்பட 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, செல்போன்கள், நிதி தொடர்பான ஆவணங்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அல் ஹுதா கல்வி அறக்கட்டளையின் தலைவர் அமீர் ஷம்ஷியையும் என்ஐஏ கைது செய்துள்ளது.

Related Stories: