தலைவர் பதவிக்கு நான் பரிந்துரைத்த 3 தலைவர்களின் பெயரை சோனியா ஏற்கவில்லை; கட்சியினரிடம் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் பரிந்துரைத்த 3 தலைவர்களின் பெயரை சோனியா காந்தி ஏற்கவில்லை என்றும், தன்னையே அவர் போட்டியிட சொன்னதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், ‘காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரிடம் (சோனியா காந்தி) நான் மூன்று தலைவர்களின் பெயர்களை பரிந்துரைக்கிறேன் என்றேன். ஆனால் அவர் யாருடைய பெயரையும் என்னிடம் கேட்கவில்லை. மாறாக என்னிடம் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சோனியா காந்தியின் குடும்பத்தினர் யாரும் கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக இல்லாததால், நான் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டேன். சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்குறுதி அளித்ததால் தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

உதய்பூர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பெண்கள் மற்றும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளில் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும். என்னை பொருத்தவரை வழிகாட்டுதல் மற்றும் கூட்டுத் தலைமையை நம்புகிறேன். கண்மூடித்தனமாக என்னை பின்பற்றுபவர்களை நான் நம்பவில்லை. ஆனால் அவர்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே ஒன்றிணைந்து நாம் கட்சியை பலப்படுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: