அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதிமுக சம்மந்தப்பட்ட சட்டமன்ற குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை புதிய துணை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் ஏற்கனவே கடிதம் கொடுத்தனர். இன்று காலை சட்டப்பேரவையில் அதிமுக சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் அப்பாவு தம்மை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில்; எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் அரக்கோணம் ரவி சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். இரு தரப்பு கடிதங்களும் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதனிடையே சட்டப்பேரவை கூட்டம் வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதிமுக தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: