அதிமுக விஐபிக்கள் சொத்து வாங்க உதவி; சேலத்தில் பத்திரப்பதிவு சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு.! முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சேலம்: சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்கள் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ேசாதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் நடக்கும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், உதவியாளராக காவேரி (58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு, சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்கு சென்று சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

இவர், கடந்த ஆட்சியில் முக்கிய விஐபிக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவரது பெயரில் எவ்வளவு சொத்து உள்ளது; உறவினர்கள் பெயரில் சொத்து வாங்கி கொடுத்துள்ளாரா என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரது வங்கி கணக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டலத்தில் காவேரியை மீறி உதவியாளர் முதல் டிஐஜிக்கள் வரை யாரும் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளே வர முடியாது என்ற நிலை இருந்தது.

சேலத்து விஐபிக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் காவேரி. இதனால் அவர்கள் சொத்து வாங்கும்போது, அனைத்து வேலைகளையும் காவேரியே செய்து கொடுப்பார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக இருந்தாலும், சார்பதிவாளராக இருந்தாலும் பதிவு பணியை காவேரியிடமே வழங்கி வந்தனர். அதிமுக ஆட்சிகாலத்தில் விவிஐபியாக இருந்தவரின் வீட்டில் சர்வசாதாரணமாக இவரை பார்க்கலாம். எந்த பதிவு அலுவலகத்திலும் உதவியாளருக்கு தனிஅறை இல்லாத நிலையில், சூரமங்கலத்தில் அறை ஒன்றையும் வைத்திருந்தார் காவேரி. விஐபிக்களுக்கு பதிவு செய்யும் போது தனி அறையில் தான் காவேரி அமர்ந்திருப்பார்.

பதிவு முழுமையாக முடிந்த பிறகே வீட்டிற்கு செல்வார். சேலம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட அதிமுக விஐபிக்கள் இங்கே சொத்து வாங்கும் போது, பணிகளை காவேரியிடமே ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது. இப்படி பெரும் சர்ச்சையில் காவேரி சிக்கிய நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்ேபாது லட்சக்கணக்கில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது, காவேரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் காவேரியின் உறவினர்கள் மூன்று பேர் வீட்டிலும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: