நடைபாதை வியாபாரிகளால் போக்குவரத்து இடையூறு பல லட்சத்தில் கட்டிய கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்-ஆலங்காயம் பேரூராட்சிக்கு மக்கள் கோரிக்கை

வாணியம்பாடி :  ஆலங்காயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்றும், பல லட்சத்தில் கட்டி பாராக மாறிய பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரையொட்டி அமைந்துள்ள ஆலங்காயம் வளர்ந்து வரும் சிறுநகரமாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள பஸ் நிலையம் அருகே திருப்பத்தூர்- ஆலங்காயம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளது.

இதில், பேரூராட்சி அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி ஆலங்காயம் போலீஸ் நிலையம் வரை நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளன. இந்த நடைபாதை கடைகளில் காய்கறிகள், பூஜை பொருட்கள், மண் பானைகள் என பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பைக்குகளை சாலையோரம் நிறுத்துகின்றனர்.

இதனால் பிரதான போக்குவரத்து சாலையில் பஸ், லாரி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி, அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் கூட தவிப்புக்கு ஆளாகின்றனர்.இத்தகைய நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆலங்காயம் வந்த திருப்பத்தூர் கலெக்டரின் வாகனமும் இங்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

அப்போதே கலெக்டர் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை. மேலும் ஆலங்காயம் போலீஸ் நிலையத்துக்கு சொந்தமான இடத்திலேயே வியாபாரிகள் குப்பைகளை கொட்டிவிட்டு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.மேலும் ஆலங்காயம் பஸ் நிலையத்தை ஓட்டி, பல லட்ச  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்படாமல், உள்ளது.

இங்கு இரவு நேரங்களில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதால் பாராக மாறியுள்ளது. எனவே திருப்பத்தூர் சாலையில் பெருகியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டு, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சந்தை கடைகளை வாடகைக்குவிட வேண்டும். இதன் மூலம் பேரூராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: