ஊட்டி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-டிரைவர்,கிளீனர் காயங்களுடன் உயிர்தப்பினர்

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் நள்ளிரவு இரவு பெய்த கனமழை காரணமாக ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர்,கிளீனர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தில் சுகுனி, புர்க்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் இங்கிலீஷ் காய்கறிகள் பெங்களூர் பகுதிக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூக்கல் தொரை கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் லாரி மூலம் பெங்களூர் பகுதிக்கு கொண்டு சென்று இறக்குமதி செய்த பின், மீண்டும் பெங்களூர் பகுதியில் இருந்து கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தை நோக்கி ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் கிளீனர் கோகுல்ராஜ் ஆகியோர் லாரியை இயக்கி வந்துள்ளனர்.

அப்போது ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் மலை பாதையில் நள்ளிரவு பெய்த கன மழை காரணமாக சாலை முழுவதும் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் ஊட்டி- கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள பாக்கியநகர் பகுதியில் சரக்கு லாரி  கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 200 அடி பள்ளத்தில் தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது லாரி ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் கிளீனர் கோகுல்ராஜ் ஆகிய இருவரும் லாரியில் இருந்து வெளியே குதித்ததால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைத்தவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லாரி விபத்துக்குள்ளானது தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: