ஆலமரத்தில் ஆயிரக்கணக்கில் தஞ்சம் வவ்வால்களை நண்பராக நேசிக்கும் விவசாயிகள்-பெரம்பூரில் பட்டாசு வெடிப்பதே கிடையாது

கொள்ளிடம் : ஆலமரத்தில் ஆயிரக்கணக்கில் தஞ்சமடைந்துள்ள வவ்வால்களை பெரம்பூர் விவசாயிகள் நண்பர்களாக நேசித்து வருகிறார். இதனால் அங்கு பட்டாசு வெடிப்பதே கிடையாது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் தெருவில் உள்ள சுமார் பத்து மரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து, குஞ்சுகள் பறக்கும் நிலை வந்தவுடன் தாய் பறவைகள் குஞ்சுகளையும் சேர்த்து தானது சொந்த இடத்துக்கே அழைத்துச் சென்று விடுகின்றன. இது பெரம்பூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வு.

இதே கிராமத்தில் வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரம் எப்பொழுதும் பறவைகள் மற்றும் வவ்வால்கள் சப்தங்களுடன் நிறைந்து காணப்படும். இந்த ஆலமரத்தில் பாலூட்டி இனமான பழந்திண்ணி வவ்வால்கள் அதிகளவில் உள்ளது. உலகம் முழுவதும் வவ்வால்களின் வகைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஆனால் இப்பகுதியில் காணப்படும் பழந்திண்ணி வவ்வால்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.இது ஒவ்வொன்றும் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உள்ளது.

இது இரவு நேரங்களில் உணவுக்காக சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று உணவை சேகரித்து விட்டு பொழுது விடிவதற்குள் மீண்டும் பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஆலமரத்திற்குதவந்து சேர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.இந்த வவ்வால்கள் இடும் எச்சங்கள் அப்பகுதியின் சுற்று வட்டார பகுதியில் உள்ள வயல்களில் இயற்கை உரமாக பயன்படுகிறது.

இப்பகுதியில் முப்போக சாகுபடி செய்யப்பட்டு வருவதற்கு வவ்வால்கள முக்கிய பங்காற்றி வருகின்றன. பல்வேறு நாடுகளில்கொரணா பாதிப்பு இருந்து வந்த நிலையில், வவ்வால் மூலம் கொரோனா தொற்று பரவும் என்று சிலரால் பரப்புரை செய்து வந்த நிலையில் இந்த வவ்வால் அப்பகுதியில் விவசாயிகளின் நண்பனாகவே இருந்து வருகிறது. பெரம்பூர் கிராம மக்கள் வவ்வால்களை பெரிதும் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி முருகானந்தம் கூறுகையில் அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் காலம் காலமாக வவ்வால்கள் இருந்து வசித்து வருகின்றன. இதனைப் பழம் திண்ணி வவ்வால்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். வேறு இடங்களில் எங்கும் அந்த வவ்வால்கள் தங்குவது இல்லை. வவ்வால் வாழ்வதற்கான சுற்றுச்சூழல் அந்த இடத்தில் இருப்பதால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வவ்வால்வாழ்ந்து வருகின்றன. எனவே எங்கள் பகுதி கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்தை வவ்வாலடி என்று பெயரிட்டு பாதுகாத்து வருகிறோம்.

வெளி நபர்கள் அதிகமாக இப்பகுதிக்கு வந்தால் வவ்வால்களை வேட்டை ஆடாமல் தடுக்க எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வேட்டைக்காரர்களை விரட்டி அடித்து வவ்வால்களை பாதுகாத்து வருகின்றார்கள். மேலும் எங்கள் கிராமங்களில் வவ்வால்களை பாதுகாப்பதற்காக அவற்றிற்கு எந்த விதமான இடைஞ்சல்களும் இடையூறுகளும் ஏற்படாத வகையில் தீபாவளி அன்று பெரம்பூர் கிராமத்தில் வெடி வெடிப்பதே கிடையாது. தற்பொழுது பெரம்பூர் கிராமத்தில் வௌவாலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு உள்ள ஆலமரத்தில் வவ்வால்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ஆலமரத்தின் கிளைகள் கீழே விழுந்தாலும் அருகில் உள்ள மரங்களில் தங்கி வாழ்ந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் இயற்கையை பாதுகாக்க வவ்வால்கள் பெரிதும் உதவுகிறது.

இதனால் இப்பகுதிகளில் அதிக மரங்கள் செடிகள் வவ்வால் எச்சத்தில் இருந்து வளர்ந்து வருகிறது. இங்குள்ள வவ்வால்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்து வருகிறது.இதனால் வவ்வால்களை அதிர்ஷ்ட தெய்வமாக நாங்கள் பார்க்கிறோம் என்றார்.

Related Stories: