திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு; செப்டம்பரில் ரூ.122.19 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருவதாக செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று நடந்த டயல் யுவர் இ.ஓ. நிகழ்ச்சியில் பங்கேற்ற தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி பேசியதாவது: திருமலை தேவஸ்தானத்தில் 7,000 அறைகள் உள்ளது. இவற்றில் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தங்க வைக்க முடியும். ஆனால் தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். மேற்கொண்டு அறைகள் கட்டுவதற்கு மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி இல்லை.

எனவே திருமலையில் உள்ள தங்கும் அறைகளை பதிவு செய்யும் வசதியை திருப்பதியிலேயே தொடங்க திட்டம் உள்ளது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதியிலேயே வேறு எங்காவது தங்கிக்கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்திற்கு செல்லலாம். கோயிலில் அதிகாலை தினமும் சுப்ரபாத சேவை, தோமாலா சேவைகள் நடைபெறுகிறது. இந்த சேவைகள் முடிந்தவுடன் விஐபிக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இலவச சேவைக்கு இரவு 7 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் மறுநாள் காலை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விஐபி தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு பிறகு மாற்றப்பட உள்ளது.

மேலும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் ஆதார் எண் மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் விரைந்து வழங்கப்படும். அதே நேரத்தில் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் வழக்கம் போல் அவர்களுக்குரிய நேரம் வரும் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யலாம் இந்த திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் விரைவாக இலவச தரிசனம் செய்ய முடியும். செப்டம்பர் மாதத்தில் ஏழுமலையான் கோயிலில் 21.12 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ₹122.19 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 98.74 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44.71 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 9.02 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்றார்.

Related Stories: