இசை தனித்துறையாக வளர வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஓ பெண்ணே’ என்ற தனி இசை ஆல்பத்துக்கு தேவி பிரசாத்  இசை அமைத்துள்ளார். இதை அவரே இயக்கி பாடியுள்ளார். இதன் தமிழ் ஆல்பத்தை சென்னையில் நேற்று நடந்த விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு ஒருகாலத்தில் தனி இசை புகழ்பெற்றிருந்தது, டி.எஸ்.சிவபாக்கியம், சீர்காழி கோவிந்தராஜன் உள்படபலரது தனி பாடல்கள் சினிமா பாடல்களை விட புகழ்பெற்றிருந்தது. சினிமா வந்த பிறகு இசையை விழுங்கிக்கொண்டது. இளையராஜா கூட சினிமா கதைக்குள்தான் தனது இசையை சுருக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. சினிமா என்ற சதுரத்திற்குள்தான் இசை இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை.

அங்கு சினிமா நட்சத்திரங்களை விட சுதந்திர இசைக்கலைஞர்கள் அதிக புகழ்பெற்றவர்களாகவும், தனி விமானத்தில் செல்லும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இங்கும் அதுபோன்ற சூழ்நிலைகள் வரவேண்டும். இசை தனித்துறையாக வளர வேண்டும். அதனால்தான் என் மகள் ஸ்ருதிஹாசனை சினிமாவை இந்தியாவில் கற்றுக்கொள், இசையை அமெரிக்காவில் கற்றுக்கொள் என்று அனுப்பி வைத்தேன். வருங்காலத்தில் சினிமாவை விட இசைதான் பெரிதாக வளரும் என்பதால் நான் அந்த முடிவை எடுத்தேன். இசைக்கலைஞர்களை மிகச் சுதந்திரமாகப் பறக்கவிட்டால் புத்தம் புது சிந்தனை வளரும், புதிய இசையும் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: