பருவ மழையின்போது ஆலந்தூரில் வெள்ளநீரை வெளியேற்ற 26 ராட்சத மின்மோட்டார்கள் தயார்: மாநகராட்சி அதிகாரி தகவல்

ஆலந்தூர்: ஆலந்தூரில் பருவமழையை சமாளிக்க 26 ராட்சத மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் சினேகா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டல எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பருவ மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை  கூட்டம் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆலந்தூர் மண்டல தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

மேலும், மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் சினேகா கலந்துகொண்டு பருவ மழையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மழை வெள்ளநீர் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகள், நீர் வழித்தடங்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் பணிகள் முடிந்த பகுதிகள், முடிக்காத பகுதிகள் போன்ற விவரங்களை கேட்டார். கூட்டத்தில், ஒவ்வொரு பருவகால மழையின்போதும் பாதிக்கப்படும் முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர் கண்ணன் காலனி, ஆதம்பாக்கம், பாலாஜி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6 ராட்சத மின்மோட்டார் பயன்படுத்தவும், மேலும்,  26 ராட்சத மின் மோட்டார்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி மெட்ரோ குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, காவல் ஆகிய துறைகளும், ஒருங்கிணைந்து வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: