மின்விளக்கு வசதி இல்லாததால் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருளில் தவிக்கும் பயணிகள்: மாடுகளும் தஞ்சமடையும் அவலம்

அம்பத்தூர்: கொரட்டூர் பேருந்து நிலையத்தில் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரட்டூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். கொரட்டூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், அம்பத்தூர் பட்டரவாக்கம், கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய போக்குவரத்து முனையமாகவும் உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கொரட்டூர் பேருந்து நிலையம், இன்றுவரை மின்விளக்கு வசதி செய்யப்படாமல் இருள் சூழ்ந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பேருந்து நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களின் அறையில் மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக, இரவு நேரங்களில் பஸ் நிலையம் வரும் வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து  50 மீட்டர் இடைவெளிக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில்  குடிமகன்கள் மதுவை வாங்கிக் கொண்டு கொரட்டூர் பேருந்து நிலையத்திற்கு வந்து அருந்துகின்றனர். பிறகு போதையில் ஆங்காங்கே பெண்கள் முகம் சுளிக்கும் வகையில்  அரைகுறை ஆடைகளுடன் படுத்துக்கிடக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைளும் பேருந்து நிலையத்தில் வந்து படுத்துக் கொள்கின்றன. இதனால் கொரட்டூர் பேருந்து நிலையம் மதுபானக் கூடமா அல்லது மாட்டு கொட்டகையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கொரட்டூர் பேருந்து நிலையத்திற்கு மின் இணைப்பு தொடர்பாக, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மின்சார வாரியத்திற்கு கடிதம் கொடுத்தும், மின்சார வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே, பஸ் நிலையத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கி பெண்கள் மற்றும் வயதானவர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: