தன்னாட்சி அந்தஸ்து கோரி வழக்கு; பொறியியல் கல்லூரிகளை யுஜிசி ஆய்வு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நான்கு வாரங்களில் சுதந்திரமாக உத்தரவு பிறப்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் விண்ணப்பித்தன.

இந்த இரு விண்ணப்பங்களையும் பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இரு கல்லூரிகள் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கு தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் எந்த விதிகளையும் வகுக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில், தன்னாட்சி அந்தஸ்து கோரிய விண்ணப்பங்கள் மீது அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்கும் உத்தரவை சுதந்திரமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தான் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்த உத்தரவை பல்கலைக்கழக மானிய குழு பிறப்பிக்கும் என்று வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை. பல்கலைக்கழகத்தின் விதிகளை மட்டுமே தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அடிப்படையாக கருத முடியாது. எனவே, இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை நிராகரித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தன்னாட்சி அந்தஸ்து கோரிய இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை சுதந்திரமாக பரிசீலித்து, நேரில் ஆய்வு செய்து, நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பல்கலைக்கழக மானியக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதேபோல, தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் எந்த உத்தரவும் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்காததால் தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி கரூரில் உள்ள வி.எஸ்.பி.பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கல்லூரியின் விண்ணப்பம் குறித்த ஆய்வு அறிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

அந்த அறிக்கையை பெற்ற 4 வாரங்களில் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவை பல்கலைக்கழக மானிய குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்குகளை முடித்துவைத்தார்.

Related Stories: