திருப்போரூர்-இள்ளலூர் சந்திப்பில் குண்டும் குழியுமான தார்சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர்-இள்ளலூர் சந்திப்பில் குண்டும் குழியுமான  தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் இள்ளலூர் சந்திப்பில் பல்வேறு இடங்களில் தார்சாலை பெயர்ந்து ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு சாலை முழுமையாக சேதமடைந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதையொட்டி ஓஎம்ஆர் சாலை புதியதாக அமைக்கப்பட்டது. அப்போதே, சாலை தரமற்று அமைக்கப்படுவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. திருப்போரூரில் உள்ள இள்ளலூர் சந்திப்பில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து குடிநீர் டேங்கர் லாரிகள் இந்த திருப்பத்தின் வழியாக திரும்பி ஓஎம்ஆர் சாலையை அடைகின்றன.

அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்பும் இடமாக இருப்பதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் பேவர் பிளாக்குகள் மூலம் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக இந்த பேவர் பிளாக் அகற்றப்பட்டு மீண்டும் தார் சாலை அமைக்கப்பட்டது. தரமான சாலை அமைக்கப்படாததால், தற்போது பெய்த சிறு மழைக்கே சாலை முழுவதுமாக பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இதில் இயக்கி விபத்தை சந்திக்கின்றனர். ஆகவே, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் திருப்போரூர்-இள்ளலூர் சந்திப்பில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: