சோத்துப்பாக்கம் ஊராட்சியில் சாலை ஓரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் ஊராட்சியில் சாலை ஓரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்க்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சி மிக வேகமாக வளர்ந்து தற்போது நகர்புறமாக மாறி வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செய்யூர் - வந்தவாசி நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்து தினந்தோறும் அகற்றவேண்டிய கழிவுகளை, அந்த கடைகளின் உரிமையாளர்கள் மூட்டைகளாக கட்டி சோத்துப்பாக்கம் ஊராட்சியில் செல்லும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடுமையான துர்நாற்றத்தை பொறுத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதுகுறித்த புகார்கள் வரும்போது, சோத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினரும் குப்பை கழிவுகளை அகற்றுகின்றனர். இருப்பினும் ஊராட்சி சார்பில் கழிவுகளை அகற்றினாலும், மறுநாள் அதேபோன்று வேறொரு பகுதியில் குப்பை கழிவுகளை மூட்டை மூட்டையாக வீசுகின்றனர். இதனை தடுக்க சோத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட கடைக்காரர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பெரிய ஊராட்சியான இங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க முடியும் என நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களும், சமூக ஆர்வலர்களும், ஊராட்சி பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

Related Stories: