ஆவடி மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம்

ஆவடி: அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆவடி மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் பூம்பொழில் நகர் உள்ளது. இப்பகுதியில், கழிவு நீர் வசதி, குடிநீர் வசதி  கோரியும்  ஆனந்த விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஆவடி பூம்பொழில் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, காலை 10 30 மணியளவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டு, அடிப்படை வசதிகளை செய்து தர கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அப்பகுதியில் வசிக்கும் 1013 பேர்கள் கையெழுத்திட்ட மனுவை, ஆவடி பூம்பொழில் நகர் குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜிடம் கொடுத்தனர். இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது. அடிப்படை வசதி செய்து தர கோரி, கவுன்சிலரிடம் கேட்ட போது, அதற்கு ஓராண்டுக்கு மேலாகும் என்றதால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். ஆவடி மாநகராட்சி நிர்வாகம் இதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக, வேறு சில குடியிருப்போர் நலசங்கத்துடன் இணைத்து ஊர்வலமாக செல்வோம் என்று கூறினர்.

Related Stories: