இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் 10ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கையா?

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட தலைமை பதவிக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 10ம் தேதி (திங்கள்) அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக வந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவு தேர்தல் நடத்த தடையாக உள்ளது. இந்நிலையில் வருகிற 10ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதம் அனைவருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுகவின் 51வது ஆண்டு விழாவை வருகிற 17ம் தேதி சிறப்பாக கொண்டாடுவது, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக போடும் வழக்குகள், ரெய்டுகளை சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். குறிப்பாக சில மாவட்டங்கள் இரண்டு அல்லது மூன்றாக பிரித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. விரைவில், ஓபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி அணியினர் கோபம் அடைந்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் பேட்டி அளித்தபோது, ‘‘அதிமுகவுக்கு துரோகம் விளைவிக்க முயற்சி செய்பவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள். ஓபிஎஸ்சுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 10ம் தேதி நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று, கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது, ஒரு மாதத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, நீதிமன்ற வழக்கு காரணமாக தொடர்ந்து காலதாமதம் ஆகிறது. இதனால், பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடியும் வரை எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: